பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த நிலையில் யாழ்.சுன்னாகம் கந்தரோடையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளது.

இது குறித்து மேலும் தொியவருவதாவது, கோடாரி, கத்திகளுடன் முகங்களைத் துணிகளால் முழுமையாக மறைத்தவாறு வீடொன்றுக்குள் உள்நுழைந்த திருடர்கள் குழு வீட்டில் உறக்கத்திலிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கியும், அச்சுறுத்தியும் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கந்தரோடை மேற்கு சங்காவத்தை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

குறித்த வீட்டு உரிமையாளரான வயோதிபப் பெண்மணியின் மகனின் முதலாவது ஆண்டுத் திவசம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் வேலைகள் செய்த அசதியில் வீட்டிலிருந்த அனைவரும் உறங்கியுள்ளனர்.

தற்செயலாக வீட்டின் ஒரு கதவு ஒரு லொக் மட்டும் போட்டுப் பூட்டியிருந்த நிலையில் குறித்த கதவினைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் நேராக அறைக்குள் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த கணவனையும், மனைவியையும் தட்டி எழுப்பியுள்ளனர்.

பின்னர், அவர்களை அங்கிருந்து எழும்பக் கூடாது எனக் கணவனைக் கோடாரியாலும், தென்னை மட்டையாலும் தாக்கியுள்ளதுடன் அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் மனைவி ஐயோ… ஐயோ… என அவலக் குரல் எழுப்பவே வீட்டின் விறந்தையில்; உறங்கிக் கொண்டிருந்த வயோதிபப் பெண்மணி தனது மகளிடம் என்னம்மா எனக் கேட்டுள்ளார்.

இதனையடுத்துக் குறித்த வயோதிபப் பெண்ணின் குரல் வந்த திசை நோக்கி ஓடிச் சென்ற திருடர்கள் அவரையும் தாக்கி அச்சுறுத்தியதுடன் மகளின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.

மகள் அணிந்திருந்த மூன்று பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலியைக் கழுத்தைத் திருகி இழுத்த அறுத்த திருடர்கள் அணிந்திருந்த ஒன்றரைப் பவுண் பெறுமதியான கைச் சங்கிலி, இரண்டு மோதிரம், காப்புகள் என்பவற்றையும் பறித்தெடுத்தனர்.

இதனால், குறித்த பெண்ணின் கழுத்தில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன.அத்துடன் குறித்த வயோதிபப் பெண்மணியின் மூத்த மகளையும் கடுமையாகத் தாக்கி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், காப்புகள் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர். தாக்குதல் காரணமாக மேற்படி பெண்ணின் கையிலும் காயங்கள் காணப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அவசரத் தொலைபேசி இலக்கம் அழைப்பு ஊடாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துச் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த வீட்டிலிருந்து உடனடியாக யாருக்கும் தகவல் செல்லக் கூடாது என்பதற்காக அங்கிருந்த இரண்டு கைத் தொலைபேசிகளையும் திருடர்கள் திருடிச் சென்று பக்கத்து வளவுக்குள் போட்டுச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் கைத்தொலைபேசிகளில் பதித்திருந்த அடையாளங்களுக்கு அமைய பொலிஸாரின் மோப்ப நாயின் உதவியுடன் குறித்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.