குருநாகல் மாவட்டம், நாரம்மல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட (விசிநவ) அகார கொளனியில் இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கொரோனா பயணத்தடை காலப்பகுதியில் ஊரின் மையத்தில் இருக்கக்கூடிய குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்ற தருணத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மடலஸ்ஸ, ஹுஸைனியா அரபுக் கல்லூரி மாணவன் அல் ஹாபிழ் மொஹமத் (வயது 18) (இவர் புத்தளம் மேர்சி உயர் கல்வி நிறுவனத்தில் கடமை புரியும் சுலைமான் நாநாவின் மகனாவார்) , மற்றும் எலபடகமயைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது அகார பகுதியில் வாடகை வீட்டில் வாழும் ரிப்னாஸ் (வயது 17) ஆகிய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

குளத்தில் இருந்த பாசி படிந்த கல்லில் ஒருவர் வழுக்கி விழ அவரைக் காப்பாற்ற மற்றவர் முயன்ற போதே இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த சடலங்கள் இரண்டையும் கடுபொத வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.