டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்டநேரமாக காணப்பட்டதையடுத்து, நேற்று முந்தினம் (1) பிற்பகல் 2.30 மணியளவில் டாம் வீதி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்த பொலிசார், சூட்கேஸிற்குள், கருப்பு நிற பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்தனர். சூட்கேஸிற்குள் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது.

அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில், சடலத்தை கொண்டு வந்து வைத்தவர்களையும், சூட்கேஸ் கொண்டுவரப்பட்ட பயணிகள் பேருந்தையும் அடையாளம் கண்டிருந்தனர்.

இதனையடுத்து ஸ்தலத்துக்கு சென்ற நீதிவான், சடலத்தை மேற்பார்வை செய்த நிலையில், சடலமாக இருந்த யுவதியின் ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்த விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.

அத்துடன் அவரது மரணத்துக்கான காரணம், குற்றம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பிலான முழுமையான விடயங்களை வெளிப்படுத்த பிரேத பரிசோதனை மற்றும் குற்றவியல் விசாரணைக்கும் நீதிவான் உத்தரவிட்டார். இதனையடுத்தே சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

குறித்த பயணப் பொதியை குறித்த இடத்துக்கு இழுத்து வந்து, அனைவரது கவனமும் வேறு திசைகளில் இருந்த வேளை அதனை கைவிட்டு செல்லும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியிருந்தது.

இந் நிலையில், அந்த சி.சி.ரி.வி. காட்சிகளை மையப்படுத்தி, குறித்த பையை அங்கு கொண்டு வந்தவர் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த டாம் வீதி பொலிஸார் குறிப்பாக எங்கிருந்து குறித்த சடலம் எடுத்து வரப்பட்டது, குறித்த யுவதி கொலை செய்யப்பட்டாரா, அப்படியானால் எங்கு எப்படி அது நடந்தது, குறித்த பயணப் பையை இழுத்து வந்த நபர் யார், அவருக்கும் சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கும் இடையிலான உறவு என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைகாண இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர்.

சன நடமாட்டம் மிக்க டாம் வீதியில், இவ்வாறு பயணப் பையில் இருந்து சடலம் மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சூட்கேஸில் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தப்பிச் சென்ற நபர் புத்தல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரென கண்டறியப்பட்டது. 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது படல்கும்புற வீட்டில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.

குருவிட்ட தெப்பாகம பகுதியை சேர்ந்த குறித்த யுவதியுடன் கள்ள காதல் தொடர்பு இவருக்கு இருந்ததாகவும் , நேற்றுமுன்தினம் ஹங்வெல்ல பகுதி ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த இவர் அங்கு யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இளம் பெண் சிவனொளிபாத மலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் காணாமல் போனதாக அண்மையில் முறையிடப்பட்டிருந்தது.

யுவதியின் தலையை வீசிவிட்டு உடலை மட்டும் கொழும்புக்கு எடுத்துவந்த இந்த நபர் , தஙகியிருந்த ஹோட்டலின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விடயத்தை வெளியில் கூறினால் கொலை செய்வேன் என்றும் எச்சரித்துள்ளார். எவ்வாறாயினும் தலைமறைவான இவரை தேடி விசேட பொலிஸ் குழுக்கள் விரைந்திருந்தன.

இந்நிலையில் , தாம் பெரிய தவறொன்றை செய்துவிட்டதாகவும் பொலிஸ் தன்னை நெருங்குவதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறி இவர் எழுதிய கடிதமொன்றும் அவரது வீட்டில் இருந்து சிக்கியுள்ளது.

இந்நிலையில் “உடலைக் கொண்டுவந்ததாகக் கூறப்படும் சப் இன்ஸ்பெக்டர் படல்கும்புராவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே தற்கொலை செய்து கொண்டார்” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குறித்த நபர் படல்கும்புர, ஐந்தாம் கட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் காட்டுப் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:-

பேஸ்புக் தொடர்பு!! மன்னிப்பு கேட்ட கொலையாளி!! கழுத்தை அறுத்தது எப்படி!!

கள்ள காதலியை வெட்டி கொன்ற பொலிசார் தற்கொலை!?

சூட்கேஸிஸ் பெண்ணின் சடலம்!! கொலையாளி அடையாளம்

சூட்கேஸில் வைத்து பயணிகள் பேருந்தில் கொண்டு வரப்பட்ட யுவதியின் முண்டம்